கொரோனா மட்டுமின்றி பல்வேறு இயற்கை பாதிப்புகளில் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிப்பிற்க்கு உள்ளாகி வருகிறது. பீகார் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதேபோல் கேரளாவில் கொச்சிக்கு அருகிலுள்ள செல்லனம் என்ற கடற்கரை கிராமம் கொரோனா நோய்த்தொற்று மற்றும் கடலரிப்புக்கு இடையில் சிக்கி பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.
இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு செல்லனம் கிராமத்தை சேர்ந்த 14 வயதான எட்கர் செபாஸ்டியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் எனது கிராமம் செல்லனம் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு உதவ யாருமில்லை. இந்த அச்சத்தினால் இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன். எனக்கு நினைவிருக்கும் காலத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை கடல் அரிப்புக் காரணமாக, எங்கள் வீட்டுக்குள்ளே தண்ணீர் பாயும்.
அதேபோல் இந்த ஆண்டும் ஜூலை 16 முதல் கடலரிப்பு தொடங்கியுள்ளது. வழக்கம் போல் எங்கள் கிராமத்தில் உள்ள பலரும் வீடுகளை விட்டு உறவினர்கள் வீட்டுக்கு செல்ல ஆயத்தமாகினோம்.
ஆனால் கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதால் எங்களால் கிராமத்தை விட்டு வேறு எங்கும் செல்ல முடியவில்லை. இதுகுறித்து பலமுறை எங்கள் கிராமத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தும் எங்களுக்கு உதவ யாரும் வரவில்லை.
தயவுசெய்து இந்த விவகாரத்தில் தலையிடுமாறு குடியரசு தலைவரை செபாஸ்டின் வலியுறுத்தியுள்ளார். மேலும் ,தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாகவும் கடல் சுவரை காட்டி எங்களை மீட்பதற்கான நடவடிக்கையை குடியரசுத்தலைவர் எடுக்க வேண்டும் எனவும் சிறுவன் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.