நம்ம இந்தியாவுல கிரிக்கெட் ஒரு மதம். கிரிக்கெட் ஒரு கொண்டாட்டம். கிரிக்கெட் எல்லோருக்குள்ளும் உறைந்திருக்கும் ஒரு கலர்ஃபுல் கனவு. ‘கிரிக்கெட்டரா ஆயிடணும்’ என்ற கனவை கடந்துவராத சிறுவன் இந்தியாவில் இருக்க முடியாது.
அதேசமயம், கிரிக்கெட் ஒரு கொடூரமான விளையாட்டு. தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட ஹீரோவை தரையில் எறிந்து புழுதிவாரித் தூற்றவைக்கும் .இன்னும் சொல்லப் போனால் கல் சிக்கினால் அதை எடுத்து வீட்டுக் கண்ணாடிகளையும் பதம் பார்க்கும், கடைசி காலத்தில் விமர்சனங்களையும் வாங்கிகொடுக்கும்.
ஆமாம்! ‘உலகக் கோப்பை ஒரு அணிக்கு மட்டுமானதில்லை என உலகுக்கு உரத்துச் சொன்ன கபில்தேவ், தன்னோட கடைசிக்காலத்தில் எள்ளி நகையாடப்பட்டார்.பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையைப் பரிசளித்த மியான்தத் இந்தியாவுக்கெதிராக 96-ல் களம்கண்டபோது பாகிஸ்தான் கூட்டம் அவரை பரிகாசித்தது.
கிரிக்கெட்டின் ஆல்டைம் கிரேட் சச்சினை ஒருகாலத்தில் கொண்டாடிய அவரொட ரசிகர்களே ‘ப்ளீஸ் ரிட்டையர் ஆகுங்க’ என வழியனுப்பத் தயாரானார்கள். தன்னுடைய 100-வது சதத்துக்காகக் காத்திருந்தார் என இப்போதும் அவர்மேல் புகார் சொல்பவர்கள் உண்டு.
ஆனா இத்தகைய குற்றச்சாட்டுகள் கிளம்புறத்துக்கு முனாடியே முடிவெடுத்துவிட்டார் தோனி. அவர் எப்போதுமே அப்படித்தான். டெஸ்ட்டில் சட்டென ஓய்வுபெற்றபோதும் சரி, கேப்டன் பதவியிலிருந்து சிரித்தபடி விலகியபோதும் சரி…
அவரோட முடிவுகள் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்
தோனி எப்போதுமே ரெக்கார்ட்களுக்காக விளையாடியதில்லை.இது அவரை குற்றம் சொல்பவர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரே விஷயம், ‘He never played for records’ உண்மைதான் அணிக்குத் தேவையானதை யோசித்து, சூழ்நிலைகளை ஆராய்ந்து அதுக்கு ஏத்தமாதிரி ஆட்டத்தின் போக்கை மாற்றி முன்எடுத்துச் செல்வது தோனியோட ஸ்டைல்.அதே மாதிரிதான் இந்த முடிவும் அப்படியானதுதான்.
தோனி என்ற பெயரை மந்திரம்போல மொத்த நாடும் உச்சரித்தது 2007-லிருந்து 2011 வரை. டி20 உலகக் கோப்பை வெற்றி, சென்னை சூப்பர்கிங்ஸ் வருகை, டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1, 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றி எனத் தோனி தொட்டதெல்லாம் பொன். கிரிக்கெட்டின் தங்கத் தலைநகராக மொத்த நாடும் ஜொலித்தது. தோனி வீடுதோறும் தலைச்சன்பிள்ளை ஆனார்.

கடைசியாக ஆடிய உலகக் கோப்பையிலும் தோனியின் பர்ஃபாமன்ஸ் குறைய வில்லைஎன்பதில் சந்தேகம் இல்லை. இது எல்லாருக்கும் நடக்கும்! விமர்சனங்களும் வரத்தான் செய்யும்! அவர் அதற்கு அப்பாற்பட்டவரில்லை! அதை மென்சிரிப்பில் கடந்துசெல்வதுதான் அவரை ரசிகர்களுக்கு இன்னமும் நெருக்கமாக்குகிறது.
தோனி அறிமுகமான காலத்தில் இந்திய அணியில் குறிபிட்ட சிலர் மட்டுமே அதிரடி காட்டினார்கள். அப்படியான பேட்டிங் லைன் அப்பில் தோனி பாய்ச்சியது புதுரத்தம். அவரின் ஹெலிக்காப்டர் ஷாட்டை பார்த்துப் பதறிப்போனார்கள் பெளலர்கள். வீட்டில் இருக்கும் குட்டி வாண்டுகள் முதல் நரை தரித்த பெரியவர்கள்வரை எல்லாரையும் டிவி முன் கொண்டுவந்து சேர்த்தது. அவரின் ஹேண்ட் பவரைப் பற்றி அடிபட்ட பந்துகள் காலத்திற்கும் பேசும்.
இப்போது முதுகுவலிப் பிரச்னையில் முன்ன மாதிரி அவரால் ஆடமுடிவதில்லை அவரால்! அவருக்கும் வயதாகிறது என்கிற யதார்த்தம் சட்டென அறைகிறது அவரின் ரசிகர்களை! மனதும் கனம் ஏறிப்போகிறது. ஆனாலும் ‘ரன்னிங், ஸ்டம்பிங்ல கடைசிவரை எங்காளுதான் கிங்கு!’ என தன்னைத்தானே கொஞ்சம் ஆற்றிக்கொள்ளப் பார்க்கிறது மனம்.
.தோனி பழைய ஃபார்மில் இல்லை என குறைக்கூறினாலும் அவர் களத்திலிருக்கும்வரை எதிரணிகள் பதற்றத்திலேயேதான் இருந்தன. அவரின் முதல் சதம் வந்த நாளில் அவருக்கு பந்து வீசிய அஃப்ரிடி முதல் கடைசியாக அவருக்கு பந்துவீசிய பெர்குசன் வரை யாருமே அவரை குறைத்து மதிப்பிடத் தயாரில்லை.
ஆனால் தோனியும் உணர்ந்துவிட்டார். கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அவரும் தன் ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார் என்பதுதான் கசப்பன உண்மை, 15 ஆண்டுகள் பிரகாசித்த சூரியன் மெல்லக் குன்றி ஒளிக்கீற்றாகி இருளில் கரைந்துபோவதை கனத்த இதயங்களோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இருள் தற்காலிகமானதுதான். நாளை, புதிதாய் தொடங்கும்.
சகாப்தம் முடியவில்லை தனது ஆணி வேரை பதித்து செல்கிறது..