பத்மநாதசாமி கோயில் பாதாள அறை திறப்பு… முழு விபரம் என்ன?

Share

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில், நாடு முழுவதும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த கோவிலில் ஆறு பாதாள அறைகள் இருப்பதாக கூறி, அவற்றினுள் என்ன இருக்கிறது என்பதை திறந்து பார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த 2011-ம் ஆண்டில் கோவிலுக்கு அருகே வசிக்கும் வக்கீல் சுந்தரராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இரண்டு முன்னாள் நீதிபதிகள் உள்பட 7 பேர் அடங்கிய குழுவை நியமித்து, பத்மநாபசாமி கோவிலின் பாதாள அறை களை திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது.


அதன்படி 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் சோதனை போட்ட போது 5 பாதாள அறைகளில் விஷ்ணு பொற்சிலை, விலை மதிக்க முடியாத வைரங்கள், வைடூரியங்கள், ஏராளமான நகைகள், தங்க நாணயங்கள், தங்கக்கிரீடங்கள் என சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் ‘பி’ என்ற பாதாள அறை மட்டும் திறக்கப்படவில்லை. ஆன்மிக ரீதியிலான பல்வேறு காரணங்களை கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த பாதாள அறை மட்டும் திறக்கப்படவில்லை.


இதற்கிடையே இந்த கோவிலை திருவாங்கூர் சமஸ்தான அறக்கட்டளையிடம் இருந்து கேரள மாநில அரசு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கேரள ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2.5.2011 அன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.


இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார்.


அறிக்கை தாக்கல்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அவர் திருவனந்தபுரம் வந்து பத்மநாபசாமி கோவிலில் 35 நாட்கள் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது ‘பி’ என்ற பாதாள அறை மட்டுமல்லாமல், ‘ஜி’ மற்றும் ‘எச்’ என்று மேலும் இரண்டு பாதாள அறைகள் திறக்கப்படாமல் இருப்பதை கண்டுபிடித்தார்.

கோவில் வளாகத்தில் தங்கத் தகடுகளை பதிக்கிற எந்திரம் இருக்கிற நிலையில், கோவிலில் இருந்து சில அசல் நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அவற்றுக்கு பதிலாக தகடுகள் பதித்த போலி நகைகள் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர் எழுப்பினார். தனது ஆய்வு தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கோபால் சுப்பிரமணியம் தாக்கல் செய்தார்.

SC upholds right of Travancore royal family in administration of ...


அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பத்மநாபசாமி கோவிலில் இதுவரை திறக்கப்படாமல் உள்ள ‘பி’ என்ற பாதாள அறையை திறந்து, அதனுள் இருக்கிற நகைகளின் மதிப்பை கண்டறிய உத்தரவிட வேண்டும். ‘ஜி’, ‘எச்’ என்று மேலும் இரண்டு பாதாள அறைகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றையும் திறந்து, அவற்றுக்குள் இருக்கிற ஆபரணங்களையும், அவற்றின் மதிப்பையும் கணக்கிட வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


கோவிலில் பராமரித்து வருகிற பொதுவான கணக்குகளில் முரண்பாடு உள்ளது. எனவே கோவிலின் பொதுவான கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளாக பக்தர்களிடம் இருந்து பெற்ற காணிக்கைகள் சரிவர கணக் கில் கொள்ளப்படவில்லை. எனவேதான் தணிக்கை தேவைப்படுகிறது. இந்த தணிக்கையை முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையர் (சிஏஜி) வினோத்ராய் தலைமையிலான குழுவைக் கொண்டு செய்யலாம்.


இந்த கோவிலின் அன்றாட காரியங்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர் குடும்பத்தின் தலையீடு இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.


இதைத்தொடர்ந்து நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 10.4.2019 அன்று வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதிகள் யு.யு.லலித், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.


நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
பத்மநாபசாமி கோவில் நிர்வாகம் மற்றும் சொத்துகளை நிர்வகிக்க மாநில அரசு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.


பத்மநாபசாமி கோயிலில் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு வந்த மன்னர் குடும்பத்தின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
கோவிலை நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட்டு வரையறுத்துள்ள புதிய வழிகாட்டுதலின்படி புதிய நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும்.

அதுவரை தற்போதைய நிலையான மாவட்ட நீதிபதி தலைமையிலான நிர்வாக குழுவே கோவிலின் நிர்வாகத்தை தொடரலாம். கோவில் நிர்வாகம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்த கூடுதல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
அந்த விதிமுறைகளின் அடிப்படையில் புதிதாக நிர்வாக குழுவை அமைக்க வேண்டும். இதுவரை திறக்கப்படாத ரகசிய அறையை திறப்பது குறித்து புதிய நிர்வாக குழு முடிவு எடுக்கலாம். இந்த குழுவில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படவேண்டும்.


இதேபோல் ஆலோசனை குழுவும் அமைக்கப்பட வேண்டும். நிர்வாக குழுவில் 5 உறுப்பினர்கள், ஆலய அறங்காவலர் ஒருவர் மற்றும் மத்திய, மாநில அரசு நியமிக்கும் அதிகாரிகள் இடம் பெற வேண்டும். 8 பேர் கொண்ட ஆலோசனை குழுவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம்.


இந்த இரு குழுக்களும் பத்மநாபசாமி கோவிலின் அனைத்து சொத்துக்கள் மற்றும் நகை உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டும். வாடகைக்கு விடப்பட்டுள்ள அனைத்து சொத்துக்களில் இருந்தும் கோயிலுக்கு வரும் வருமானத்தை பாதுகாக்க வேண்டும்,
கோயிலின் சடங்குகள் மற்றும் பூஜைகள் தலைமை தந்திரியின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின்படி நடத்த வேண்டும். கோவிலின் மரபு மற்றும் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையின் அடிப்படையில் தலைமை தந்திரி பதவி நிர்ணயிக்கப்படும்.


கோவிலின் வருமானம் அனைத்தும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் ஆலோசனை குழுவின் அறிவுரையின்படியும் செலவழிக்கப்படவேண்டும். கோயிலின் சொத்துக்கள் ஏதேனும் தவறாக கையாளப்பட்டு வந்தால் அவற்றை மீட்கும் நடவடிக்கையை இந்த குழுக்கள் எடுக்க வேண்டும்.


கடந்த 25 ஆண்டுகளாக கோவிலுக்கு கிடைத்த வருமானம் மற்றும் செலவு பற்றி கணக்கு தணிக்கை செய்யப்பட வேண்டும். பாதாள அறை ‘பி’ திறப்பது குறித்து நிர்வாக குழுவும், ஆலோசனை குழுவும் முடிவு எடுக்கும். இந்த இரு குழுக்களும் எடுத்த நடவடிக்கை குறித்து டிசம்பர் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மாநிலத்தின் தலைமை தணிக்கையாளருக்கு கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கை ஆண்டு இறுதியில் தாக்கல் செய்யவேண்டும்.


மன்னர் குடும்பம் அல்லது அவர்களின் வாரிசுகள் கோவிலின் நிர்வாகி அல்லது அறங்காவலர் என்ற முறையில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளக்கூடாது. நிர்வாக குழுவால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரிக்கு அந்த குழுவால் நிர்ணயிக்கப்படும் ஊதியத்தை வழங்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.


பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு, 9 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் குடும்பத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.


Share

Related posts

EPS OPS கூட்டறிக்கை: அடங்குமா அதிமுகவின் சலசலப்பு

Admin

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பில்லை: டிரம்ப் அறிவிப்பு

Admin

ஹஜ் யாத்திரை தொடக்கம்: ஆயிரம் பேருக்குதான் அனுமதி

Admin

Leave a Comment