தினம் ஒரு திருப்புகழ் என்ற இந்தப் பகுதியில் தினம் ஒரு பாடல் என்று அல்லாமல், தினம் ஒரு பகுதி என்று படிக்கலாம்.
அந்தவகையில் இன்று திருப்புகழ் பாயிரம் (நூல் குறித்து நூலாசிரியரே தரும் அறிமுகம் என்று கொள்க) பார்க்கலாம்.
பாயிரம் (1-5)
எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர்சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? – பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்குஞ் செவி? 1
மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ?
ஆணிப்பொன் கையுறுவார்க் கையுறவேன்? – பேணிப்பின்
செவ்வேல் விநோதன் திருப்புகழ்சிந் தித்திருப்பார்க்
கெவ்வேலை வேண்டும் இனி? 2
சீராந் திருப்புகழைச் செவ்வேள்மேல் அன்பாக
ஆராய்ந் துரைத்தான் அருணகிரி; – நேராக
அந்தப் புகழை அநுதினமும் ஓதாமல்
எந்தப் புகழோது வீர்? 3
அருணகிரி நாதன் அகிலதலத் துன்னைக்
கருணையினாற் பாடுங் கவிபோற் – பிரியமுற
வேறுமோர் புன்கவிகள், வேலோனே! நின் செவியில்
ஏறுமோ? என்னே இனி? 4
ஆனைமுக வற்கிளைய ஐயா! அருணகிரி
தேனனைய சொல்லான் திருப்புகழை – யானினைந்து
போற்றிடவும் நின்னைப் புகழ்ந்திடவும் பொற்கமலஞ்
சாத்திடவும் ஓதிடவும் தா. 5