போலி விளம்பரத்திற்காக உலகில் மிகவும் பிரபலமான மற்றும் பெரும் கோடீஸ்வரர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிட்காயின் எனப்படும் கண்ணுக்கு தெரியாத கரன்சி சில ஆண்டுகளாக மிக பெரிய சர்ச்சையை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான் ஜெஃப் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் இணைய ஊடுருவிகள் ஊடுரு, பிட்காயின் மூலம் நன்கொடை அனுப்பினால் அரை மணி நேரத்தில் அந்த தொகையை இரட்டிப்பாக அனுப்புவோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இதனை நம்பி சில நிமிடங்களில் இந்திய ரூபாயில் மொத்தம் 75 லட்சம் ரூபாய் அளவுக்கான நன்கொடை தொகையை பலர் செலுத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த ஊடுருவலை கண்டறிந்த ட்விட்டர் நிறுவனம், பாஸ்வர்டு மாற்றி அமைக்கும் வசதியை உடனே நிறுத்திவிட்டது. இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.