ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஹோட்டல் ஒன்று தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கு கொரோனா நோயாளிகள் பலரும் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் மருத்துவமனை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தரைத்தளத்தில் முதலில் தீ ஏற்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் முதல் மற்றும் இரண்டாவது என பிற தளங்களுக்கும் தீ பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 30 நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ பரவுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நோயாளிகளில் இரண்டு பேர் தங்களது உயிரைக் காப்பாற்ற மாடியில் இருந்து குதித்துள்ளனர். அதில் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 20-க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இன்னும் சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.