அயோதியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை: பிரதமர் மோடி பங்கேற்கிறார்…

Share

ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்டநாள் ஆசையாகும்.

அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. ஆனால் அங்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் இருந்தன.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

எனவே ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்மபூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி ஆகஸ்டு 5-ந்தேதியாம் இன்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பங்கேற்க வைப்பது என தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தநிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனவே மிக மிக முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் தொடர்ச்சியாக ராமர் கோவில் பூமி பூஜைக்கான சடங்குகள் ராமஜென்மபூமியில் நேற்று முன்தினம் காலையில் தொடங்கின. தொடர்ந்து நடந்து வரும் இந்த சடங்குகளின் நிறைவாக இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 9.35 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து லக்னோ கிளம்புகிறார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கிளம்பும் அவர் 11.30 மணியளவில் அங்குள்ள சாகேத் கல்லூரி மைதானத்தில் இறங்குகிறார்.

பின்னர் நேராக அனுமன்ஹார்கி கோவிலுக்கு செல்லும் அவர், சுமார் 10 நிமிடங்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து 12 மணியளவில் ராமஜென்மபூமிக்கு சென்று அங்கு ராம்லல்லா அதாவது குழந்தை ராமர் கோவிலில் வழிபாடு செய்கிறார். அத்துடன் அங்கு மரக்கன்று ஒன்றையும் பிரதமர் நட்டு வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் 12.30 மணியளவில் ராமர் கோவில் பூமி பூஜையில் இணைகிறார். அத்துடன் பிரமாண்ட ராமர் கோவிலுக் கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார். பின்னர் விழாவின் நினைவாக சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு அவர் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

சுமார் 1½ மணி நேரம் அங்கு தங்கியிருக்கும் பிரதமர் மோடி, பின்னர் மீண்டும் சாகேத் கல்லூரிக்கு திரும்புகிறார். அங்கிருந்து பிற்பகல் 2.20 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் லக்னோ திரும்புவார்.

மோடி பிரதமரான பிறகு அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே தேர்தல் நேரங்களில் பலமுறை அயோத்தி சென்றிருந்தாலும் சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக அங்கு சாமி தரிசனம் செய்வதை தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்பதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், துணைத்தலைவர் பையாஜி ஜோஷி ஆகியோர் நேற்று மாலையிலேயே அயோத்தி சென்றடைந்தனர். அவர்கள் இருவரும் இன்று பிரதமருடன் விழாவில் பங்கேற்கின்றனர்.

இவர்களை தவிர மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

அயோத்தி ராமர் கோவில் அடியில் 2,000 அடி பள்ளத்தில் குறிப்பேடுகள்...  Notebooks in a 2,000 feet deep abyss under the Ayodhya Ram Temple|  Arivudaimai | Latest Tamil News | Online Tamil News | epaper tamil |

மேலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், பாபா ராம்தேவ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பா.ஜனதா தலைவர்கள், சாமியார்கள் என முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்கள்.

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெறுவதையொட்டி அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வை அயோத்தி மக்கள் தீபாவளி போல கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். தங்கள் வீடுகளில் விளக்கேற்றியும், வண்ண விளக்குகளால் அலங்கரித்தும், வாசலில் கோலமிட்டும், இனிப்புகள் பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் சரயு நதிக்கரை, நகர வீதிகள், ராமஜென்மபூமி சுற்றுவட்டாரங்கள் என மாவட்டம் முழுவதும் ராமாயண காட்சிகள், ராமபிரானின் படங்கள் சுவர்களில் வரையப்பட்டும், வீதி முழுவதும் கோலமிட்டும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இரவில் வண்ண விளக்குகளால் ஒளியேற்றியும், அகல் விளக்கேற்றியும் வருவதால் அயோத்தி முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அயோத்தி முழுவதும் மிகத்தீவிர தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஏராளமான சுகாதார அதிகாரிகள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

இதைப்போல பிரதமர் மோடி மற்றும் ஏராளமான முக்கிய தலைவர்கள் பங்கேற்பதால் அயோத்தியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தி மாவட்டம் முழுவதுமே ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் அயோத்தி கொண்டு வரப்பட்டு உள்ளது.

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுவதையொட்டி நாட்டு மக்கள் அனைவரின் கவனமும் அயோத்தியை நோக்கியே இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை நேரில் காண இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களும் ஏங்கினர்.

ஆனால் கொரோனா தொற்றால் நேரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ராமபக்தர்களின் இந்த ஏக்கத்தை தணிப்பதற்காக இன்றைய நிகழ்வுகளை டி.வி.க்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு..! ஜொலிக்கும் அயோத்தி..! ராமர் கோவில் பூமி  பூஜைக்கு அனைத்து ஏற்பாடுகளும் ரெடி..! - Update News 360 | Tamil News Online  | Live News ...

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் பா.ஜனதாவின் மற்றுமொரு முக்கியமான தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி நீக்கப்பட்டதன் மூலம் ஏற்கனவே முக்கியமானதொரு தேர்தல் வாக்குறுதியை பா.ஜனதா நிறைவேற்றி இருந்தது.

அதன் முதலாம் ஆண்டு தினத்தில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் இந்துக்களின் கனவும் நனவாகிறது. இந்த நிகழ்வை பல்வேறு எதிர்க்கட்சிகளும் வரவேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ராமர் கோவிலுக்கு இன்று பிரதமர் மோடியின் முன்னிலையில் கட்டுமானப்பணிகள் தொடங்குகிறது. அங்கு அமைய உள்ள பிரமாண்ட கோவிலின் கருவறையில் 3 ஆண்டுக்குள் பக்தர்கள் வழிபட முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.


Share

Related posts

குளித்தலை எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா

Admin

கிராம சபை கூட்டங்கள் இந்த முறை தேவையில்லையா?

Admin

பாலியல் வன்கொடுமை செய்த மாணவியை திருமணம் செய்து கொள்ள தயார்: கேரளா பாதிரியார் மனு

Admin

Leave a Comment