ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடந்ததை தொடர்ந்து அயோத்தியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தும், சரயு நதியில் நீராடியும் மகிழ்ந்து வருகின்றனர்.
பல்லாண்டு கால சட்ட போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, ராமபிரான் அவதரித்த அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நேற்று முன்தினம் நடந்தது. இது நாடு முழுவதும் மிகப்பெரும் கொண்டாட்டங்களை உருவாக்கி உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வுகளை தொடர்ந்து அயோத்தியில் மக்களிடம் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அயோத்தியில் நேற்று குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அனுமன்ஹார்கி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அங்குள்ள சரயு நதிக்கரையில் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பலர் சரயு நதியில் நீராடி மகிழ்ந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தியவாறே இருந்தனர். இந்த நாளுக்காகத்தான் மக்கள் நீண்டகாலமாக காத்திருந்ததாக அவர்களும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.