கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அப்போது கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய பகுதிகளில் மட்டும் கனமழை பெய்தது.
பெங்களூரு உள்பட மற்ற மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு உள்ளிட்ட தென்கர்நாடக மாவட்டங்களிலும், பாகல்கோட்டை, விஜயாப்புரா, கதக், பல்லாரி, ராய்ச்சூர், யாதகிரி, பெலகாவி, கொப்பல் உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மராட்டியத்திலும், வடகர்நாடகத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால் மீண்டும் கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகாவில் உள்ள 25 கிராமங்களும், பாதாமி தாலுகாவில் உள்ள 34 கிராமங்களையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. இதன்காரணமாக கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுபோல பெலகாவி மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மல்லபிரபா அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணையில் இருந்து தண்ணீர் மல்லபிரபா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மல்லபிரபா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக மல்லபிரபா ஆற்றங்கரையையொட்டி வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் 45 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதவிர வடகர்நாடகத்தில் உள்ள ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. தொடர் கனமழை காரணமாக வடகர்நாடக மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.