நாடு முழுக்க தற்போது பேசப்பட்டு வரும் பரபரப்பான பேசுபொருள், EIA2020. மிக எளிமையாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நாட்டு வளங்கள் தொழில்வளர்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாது என்ற நோக்கில் பெருநிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் வைக்கும் செக் அது.
தொழில் தொடங்கும் நிறுவனங்கள், காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் பாதிப்புகளைக் கவனத்தில் கொண்டுதான் தன் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்பற நிலையை உருவாக்குவதே இந்த சூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்டத்தின் மைய நோக்கம்.
EIA 2020: கால அவகாச நீட்டிப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு
இது தொடர்பாக தனது வலைக்காட்சிப் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே. தன் கிடுக்குப்பிடிக் கேள்விகளால் தமிழக அரசியலில் பலரையும் கிடுகிடுக்க வைத்த பெருமை இவருக்கு உண்டு. தற்போது தொலைக்காட்சி ஊடகங்களில் இருந்து வெளிவந்து யூட்யூபில் இயங்கி வருகிறார். இந்நிலையில், மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைக் குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொய்கள் பொதிந்ததாகவும், பொது அறத்துக்கு முரணான கண்னோட்டத்துடனும் இருக்கும் அந்தக் காணொலிக்கு பதில் அளிக்க விரும்புகிறது பென் பாய்ண்ட்.

பால்கோ விவகாரம்:
1983 இல் ஒரிசாவில் பாக்சைட் எடுப்பதற்காக, மலையைக் குடைய அரசின் அனுமதி பெற்றது. ஆனால், இன்றுவரையிலும் முடியவில்லை. காரணம் அங்கிருந்த பழங்குடி மக்கள் கடுமையாகப் போராடியதுதான் என்று தெரிவித்தார். அதில் தவறென்ன?
ஆனால், உண்மை அதுமட்டுமல்ல. BALCO பால்கோ நிறுவனம் 1992ஆம் ஆண்டு தன் முயற்சியைக் கைவிட்டது. ஆனால், உட்கல் அலுமினா (Utkal Alumina – ஹிண்டால்கோ (HINDALCO) மற்றும் கனடிய நிறுவனம் ஒன்றின் கூட்டு நிறுவனம்) அங்கே நுழைந்தது. அப்போதும் மக்கள் எதிர்த்தனர். ஆனால், மாநில அரசாங்கமும் அந்நிறுவனத்தை அனுமதித்தது.
ஸ்டெர்லைட்டும் தமிழ்நாடும்… 1994 முதல் 2019 வரை…
கடந்த 2004 ஆம் ஆண்டில்தான் உட்கால் அலுமினா நிறுவனம் தன்னுடைய தாது சுத்திகரிப்பு ஆலையை ஒரிசா மாநிலம் குச்சைபடாரில் தொடங்கியது. இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? அந்த மக்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாகக் குலைக்கப்பட்டு, அவர்கள் துரத்தப்பட்டனர். போராடிய பலர் இன்னும் நக்சல் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலுள்ளனர். இதை மறைத்துவிட்டார் ரங்கராஜ் பாண்டே.
இதுபோலவே தன் விருப்பங்களையும், அரசியல் ஆதரவு நிலையையும் அந்த வீடியோவில் வெளிப்படுத்தி இருந்தார் (பேரபாயங்களை மறைத்து மீச்சிறு நன்மைகளைப் பட்டியலிட்டு) அண்ணனும் ஆசானுமான ரங்கராஜ் பாண்டே.