இட ஒதுக்கீடு விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு PenPoint-ன் வேண்டுகோள்

Share

வாசகர்களுக்கு வணக்கம்!

ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில், உண்மையிலேயே கொண்டாடத்தக்க தீர்ப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பிரதானக் கட்சிகள் இந்த விவகாரத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தன. குறிப்பாக பாமக, மதிமுக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை.

தற்போது வெளியாகியிருக்கும் தீர்ப்பு ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க்க தீர்ப்பு என்றும், இந்த தீர்ப்பை மனதார வரவேற்பதாகவும் அரசியல் கட்சிகள் பலவும் தெரிவித்து வருகின்றன.

கூடுதலாக, அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும், இதற்குக் காரணமே தாங்கள்தான் என்ற தொனியில் பேசி வருகின்றன.

அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

பாஜக இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்கிறார் மு.க.ஸ்டாலின்.

இதற்கிடையில் இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்கிறது தமிழ்நாடு பாஜக.

அதே போல பாமக நிறுவனர் இராமதாஸும் நாங்கள்தான் முதலில் இது குறித்து வழக்குத்தொடர்ந்தோம் என்று வலியுறுத்தி வருகிறார். இன்னபிற கட்சிகளும் இதே வேலையச் செய்து வருகின்றன. சரி எல்லா கட்சிகளுமே முதலில் வழக்குப்பதிந்ததாக வைத்துக்கொள்வோம். தீர்ப்பு வந்தபிறகு, தீர்ப்பை வரவேற்கும் கட்சிகள் இந்த தீர்ப்பு முழுமையடைவது குறித்து ஒரு வரியும் பேசவில்லையே?

இந்நிலையில், பென் பாய்ண்ட் குழுமத்துக்கு ஒரு கேள்வி வருகிறது. இவர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்பது ஏன்? நிஜமாகவே சமூகநீதி காப்பற்றப்பட்டதை வரவேற்றா அல்லது தாங்கள் காரணம் என்று மக்களிடம் பிரசங்கம் செய்யவா?

உண்மையில், இது பொறுப்புணர்வுள்ள அரசியல்வாதிகளாலும், கடமை தவறாத நீதிபதிகளாலும் மட்டுமே சாத்தியமான ஒன்று என்பது மட்டுமே தற்போது மக்களுக்குத் தேவையான புரிதல். பல சமயங்களில் நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலைவரும் சூழலில், இதுபோன்ற தீர்ப்புகள் ஜனநாயகத்தில் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்துகின்றன.

மேல்முறையீடு கூடாது என்றும், தாமதமின்றி சட்டமியற்றுக என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ள இந்த சமயத்தில், கட்சிகள் தங்களுக்குள் குழாயடிச் சண்டை இட்டுக்கொண்டிருப்பது இந்தத் தீர்ப்பின் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடும்.

சண்டையிடுவதைத் தவிர்த்துவிட்டு, அல்லது தங்களால்தான் நிகழ்ந்தது என்ற தம்பட்டங்களைத் தவிர்த்துவிட்டு ஒரே கோரிக்கையின் கீழ் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் ஓர்மைப்பட வேண்டும்.

என்ன கோரிக்கை:

தீர்ப்பில் சொல்லப்பட்ட இரண்டும் செயலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.

தீர்ப்பில் சொல்லப்பட்டதன்படி, அடுத்த 3 மாதங்களுக்குள் இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும். அதற்கான வரைவுகுழுவை அமைக்கும் பணியை விரைந்து (அடுத்த 7 நாட்களுக்குள்) செய்யவைக்க தொடர் அழுத்தம் (தினந்தோறும் நகர்வுகளைக் கண்காணித்து அனைத்துக் கட்சிகளும் கேள்வி எழுப்புவது) தர வேண்டும்.

இந்தக் கோரிக்கையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து சட்டமியற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் . அதன்பிறகுதான் இந்த விவகாரத்தில் வெற்றி என்ற சொல்பயன்படுத்தப்பட வேண்டும். அதுவரையிலும் வெற்றிப்பாதைதானே ஒழிய முழு வெற்றி அல்ல

நீ, நான் என்ற போட்டா போட்டிகளிலும்,அதில் வெளிப்படும் வார்த்தைகளுக்கு மாறி மாறி பதில் கொடுத்துக்கொண்டே அடுத்த 3 மாதங்களை கடத்திவிட்டு கடைசி நேரத்தில் கூக்குரல் எழுப்பும் நிலை வந்துவிடக்கூடாது. அரசியல் கட்சிகளே! கவனம்!

நல்ல வாய்ப்பு… உங்கள் உள்ளூர் சண்டைகளால் உன்னதமான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்பதே பென் பாய்ண்ட் குழுமத்தின் ஒரே கோரிக்கை.


Share

Related posts

‘நீட்’ தேர்வு மையத்தை மாற்றும் வசதி, 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்

Admin

ஸ்டெர்லைட்டும் தமிழ்நாடும்… 1994 முதல் 2019 வரை…

Admin

ரஜினி Exclusive|போலி இ-பாஸ்… சிக்கினார் சூப்பர் ஸ்டார்

Admin

Leave a Comment