பக்ரீத் பண்டிகை:முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
பக்ரீத் பண்டிகை இன்று கொண் டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்:
இறைவனின் கட்டளைக்கு மனிதன் கீழ்ப்படிவதன் அடையாளமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்புனித நாளில் தாராளம், சகிப்புத்தன்மை, இரக்கம் ஆகிய நற்பண்புகளை நிலைநிறுத்த அனைவரும் உறுதி ஏற்போம்.
முதல்வர் பழனிசாமி:
இந்த தியாகத் திருநாளில் திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள்அனைவரும் மனதில் நிறுத்திஅன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: பக்ரீத் எனும் தியாகத் திருநாளில், அன்புக்குரிய இஸ்லாமிய சகோதார சகோதரிகளுக்கு மனம்கனிந்த பக்ரீத் வாழ்த்துகள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சிறப்புத் தொழுகை, ஈகை ஆகிய இரண்டையும் பக்ரீத் பண்டிகை தினத்தில் இரு கண்களாக பாவித்து, நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட எனது வாழ்த்துகள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி:
உலகில் வாழும் அனைவரும் ஒரே தாய், தந்தை வழி வந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சகோதரத்துவம், அன்பு, நல்லிணக்கம் ஈகை, மாற்றுத் திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும். நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் நலமுடனும், எல்லா வளமுடனும், சமவாய்ப்பும், சம உரிமையும் பெற்றிட வேண்டுமென இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழகத்தில் காலம்காலமாக உறவுமுறை கூறிஉணர்வுப் பூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள்,இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும், சமூகஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பக்ரீத் திருநாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவரும் தம் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:
சாதி, மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்திட பக்ரீத் திருநாளில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.