EPS OPS கூட்டறிக்கை: அடங்குமா அதிமுகவின் சலசலப்பு

அதிமுக
Share

கடந்த இரு வாரங்களாக தமிழக அரசியலில் பற்றி எரியத் தொடங்கிய பிரச்சினையை, அறிக்கையூற்றி அணைத்திருக்கின்றனர் அதிமுகவின் இரட்டைத் தலைவர்கள்.

முதல்வர் யார் என்பதை சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்வர் என்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துதான் இந்தப் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி.

தொடர்ந்து இன்னபிற அமைச்சர்களும் மாறி மாறி கருத்துச்சொல்ல, போதாதா ஊடகங்களுக்கு. அதிமுகவை வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டன. வாதப் பிரதிவாதங்கள் வீண் விவாதங்கள் என பிரச்சினை வளர்ந்தது.

இந்நிலையில், சம்யோசிதமாக செயல்பட்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இனைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

அதாவது, “அனைத்து நிலைகளிலும்‌ செயல்பட்டு வரும்‌ கழகப்‌ பொறுப்பாளர்கள்‌ உள்ளிட்ட
அனைவரும்‌, எந்தவித முன்யோசனையும்‌ இன்றி, கழகத்‌ தலைமையின்‌ ஒப்புதல்‌ இல்லாமல்‌, தொலைக்காட்சிகள்‌ உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும்‌, பத்திரிகைகளிலும்‌, தங்களின்‌ தனிப்பட்ட கருத்துகளைத்‌ தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்‌. இதை மீறுவோர்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌
” என்று தெரிவித்தது அதிமுக.

3 பக்க அறிக்கையில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தது அதிமுக. மொத்தத்தில் யாரும் எதைப்பற்றியும் வாய்திறக்கக் கூடாது. திறந்தால் தண்டனை. அவ்வளவுதான் சாராம்சம்.

இதன்மூலம் ஊடகங்களின் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.ஆனால், யார் வாயைக் கட்டினாலும், ஊர் வாயைக் கட்ட முடியுமா?

EPS

அதிமுகவில் பிளவு இருக்கிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் கவனிக்கத் தொடங்கிவிட்டது. ஊடகச் செய்திகளை நிறுத்திவிட்டால், கொஞ்ச நாட்களில் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று எண்ணலாம். ஆனால், தேர்தல் நெருங்கப்போகிறது. இனி எந்தக் கட்சி செய்யும் எந்தச் செயலையும் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்கப்போவதில்லை.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம் என்னும் பெருநெருப்பு காட்டுத்தீ ஆகும்முன் அணைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால், இன்னும் புகைந்துகொண்டுதான் இருக்கிறது. இனி வரப்போகும் சிறு அலைவும் கூட மீண்டும் பெருநெருப்பைக் கிளப்பிவிடும்.

இனி தினந்தோறும் டீக்கடை பெஞ்சுகளுக்கு இந்த விவகாரம்தான் பேசுபொருள். ஊரக அரசியல்வாதிகளின் பேச்சிலும், அதிமுக அடிமட்டத் தொண்டர்களிடையிலும் இந்தப் பேச்சை இனி தவிர்க்க முடியாது. இன்னும் ஒரு படி மேலே போய் சிந்தித்தால், இந்த கூட்டறிக்கையாலும் முடிவு ஏற்படப்போவதில்லை.

அதிமுகவில் கட்சி நலன் என்பதை விட தங்கள் தரப்பு நலன் என்பதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். உட்கட்சிப்பூசல்கள் இன்னும் இன்னும் பெரிதாவதற்கு இந்த மனநிலைதான் அடிப்படை. இந்த அறிக்கையால் அதிமுகவின் பூசல் அடங்கும் என்பது ஏற்பதற்கில்லை.


Share

Related posts

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் உள்ள பொருட்கள்

Admin

அப்துல்கலாம்: பேய்க்கரும்பு மணிமண்டபத்தில் திமுக மரியாதை

Admin

மக்னா யானை: கோவையில் காயம்பட்டு சுற்றி வந்த யானை உயிரிழப்பு

Admin

Leave a Comment